வெள்ளி, 1 ஜனவரி, 2010

வெல்க, மொரேல்ஸ்!

வெல்க, மொரேல்ஸ்!


“பூமித்தாய் பெற்றெடுத்த உலகக் கதாநாயகன்” என்று கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. பொதுச்சபையால் புகழாரம் சூட்டப்பட்ட பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

சுமார் 470 ஆண்டுகளாக ஸ்பெயின் ஆதிக் கத்தின் கீழ் இருந்த பொலிவியாவில் முதல் முறையாக அய்மாரா பூர்வ குடியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 45 சதவீதம் வாக்குகள் பெற்ற அவர், 2008 ஆகஸ்ட் 14ந்தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 57 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மேலும் 10 சதவீத வாக்குகள் அதிகரித்து, 67 சதவீத வாக்கு கள் பெற்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாத சக்தியினை பெற்றுள்ளார்.

மொரேல்ஸின் “சோசலிசத்திற்கான இயக் கம்” என்ற கட்சி மிகப்பெருவாரியான பொலிவிய மக்களின் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு, அவர்களின் நம்பிக்கையை மீண்டும் மேலும் வலுவான முறையில் பெற்றிருப்பதற்கு, கடந்த நான்காண்டுகளில் மொரேல்ஸ் ஆற்றிய மகத்தான பணிகளே காரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் களமாக இருந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமான நாடு பொலிவியா. அமெரிக்க பெரும் நிறுவனங்களின் ஆடுகளமாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய மைய மாகவும் இருந்த பொலிவியாவில், மொரேல்ஸ் தலைமையிலான இடதுசாரிச் சார்பு கொண்ட ஆட்சி அமைந்த பின்னர் நிலச்சீர்திருத்தம் தீவிரப்படுத்தப்பட்டது; அந்நாட்டின் மிகப்பெரு வாரியான பூர்வகுடி ஏழை மக்களுக்கு நிலமும், கல்வியும், வேலைவாய்ப்பும் உத்தரவாதப்படுத் தப்படும் வகையிலான புதிய கொள்கைகள் அமலாக்கப்பட்டன; சமீபத்தில் எண்ணெய் நிறு வனங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; கடந்த மூன்றாண்டு களில் எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலு மாக ஒழிக்கப்பட்டுவிட்டது; லத்தீன் அமெரிக் காவில் கியூபா, வெனிசுலாவைத் தொடர்ந்து எழுத்தறிவின்மையிலிருந்து முற்றிலும் விடு தலைபெற்ற நாடாக பொலிவியா திகழ்கிறது; லட் சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தியது மொரேல்ஸ் அரசு.

சமீபத்தில் கியூபாவின் மகத்தான தலைவர் பிடல்காஸ்ட்ரோ எழுதிய கட்டுரையில், மொரேல்ஸின் இந்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு, உலகை நாசப்பாதைக்கு கொண்டுசென்ற அமெரிக்க ஏகாதிபத்திய தேர்ந் தெடுத்த ஜனாதிபதி ஒபாமாவுக்கு அறிவிக்கப் பட்ட நோபல் பரிசு நியாயமாக மொரேல்ஸுக்குத் தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 6ந்தேதி ஜனாதிபதி தேர்தலில் மேலும் பெருவாரியான மக்களின் இதயங்களை வென்று மொரேல்ஸ் மகத்தான வெற்றி பெறுவார் என்று பிடல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். அவரது வாக்கு இன்று நனவாகியுள்ளது. பொலிவிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் ஆலோ சனை நடத்தாமலே அரசியல் அமைப்புச் சட் டத்தைக் கூட மாற்றும் அளவிற்கு தற்போது மொரேல்ஸுக்கு பலம் கிடைத்துள்ளது. எனினும், “எமது இலக்கு ஒட்டுமொத்த பொலிவியாவின் வளர்ச்சி; மாற்றுப்பாதையில் நடைபோடும் வளர்ச்சி; அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்துப் புதிய பாதையில் பொலிவியாவை முன்னேற்றுவோம்” என்று வெற்றி ஊர்வலத்தில் கூறியுள்ளார்.

வெல்க, மொரேல்ஸின் மகத்தான முன்னேற்றப் பயணம்!
நன்றி -தீக்கதிர்

பெரியார் பேசுகிறார்


தோற்றம் - 17-09-1879- மறைவு -24-12-1973


பெரியார் பேசுகிறார்


-தொகுப்பு : மதுக்கூர் இராமலிங்கம்

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய் தவர். அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளி மையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர். அவரது நினைவு நாளான இன்று பெரியார் என்ற பெருங்கடலிலிருந்து சில துளிகள்:

“நான் ஒரு சுதந்திர மனிதன்; சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப் பிக்கிறேன். நீங்கள் என்னைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள் ளக்கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என் கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதை யும் தெரிவிக்கின்றேன்”. (புரட்சி 17-12-1933).

“நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட் டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடு வீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைக ளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்.” (குடியரசு 11.9.1927)

“சிலரின் அருவருப்புக்கோ, கோபத் திற்கோ பயந்து நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல; அவ் விதம் செய்வது பயத்தாலும், சுயநலத்தாலுமே யாகும்... .... ... ஒவ்வொரு இடங்களிலும் சுய மரியாதை உணர்ச்சி உண்டாக பாடுபடுங்கள்; உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங் கள் மிதித்து அடிமைப்படுத்தி வாழும் பழக்கத் தை- உங்கள் மயிர்க்காம்புகளிலெல்லாம் கூடி தடுப்பேறிய மானமற்ற வாழ்க்கை நிரம் பிய உணர்ச்சியை - உடனே உதறித்தள்ளுங் கள்.” (வைக்கம் வீரர் சொற்பொழிவு 1923).

உங்களிடம் தப்பிதம் கண்டுபிடித்து, உங் கள் உடம்பில் துர்வாடை அடிக்கிறது; நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை; துணி துவைப் பதில்லை; மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள்; மது அருந்துகிறீர்கள்; இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேட்டி துவைக்காமலும், குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் கள் உணர்வதில்லை. உங்களுக்கு குடிக் கவே தண்ணீர் இல்லை என்றால், குளிப்பது எப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடப் பிறந்தவையா என்று கேட்கிறேன். குளிக்க வும், வேட்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல், மகந்துகள் என் போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டில் அடைத்துவைத்து விட்டால், அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும், வாயும் நாற்ற மடிக்காமல் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்! நாமே ஒருவனை பட்டினிப் போட்டுவைத்து, அவர் இறந்துபோன பிறகு பட்டினியால் இறந்துபோய்விட்டான், பாவி என்று சொன்னால் யார் பாவி என்று நினைத் துப்பாருங்கள். (குடியரசு 25-4-1926)

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணு லகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம் பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாகும். (குடியரசு 22.8.1926).

பொதுமக்களில் பெண்கள், தீண்டாதார் கள் என்பவர்கள் மிக மோசமாக அழுத்தப்பட் டிருக்கிறார்கள். புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பதுபோலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் ஆணுக்கு பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்ப தாகக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரேயானால் முதலில் அந்த கடவுளை ஒழித்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமா னால் முதலாவதாக அவர்களை கற்பு என்ற சங்கிலியில் கட்டிப்போட்டிருக்கும் கட்டை உடைத்தெறியவேண்டும்! கட்டுப்பாட்டிற் காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலும் கூடாது. கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காக வும் இருவர்களையும் கற்பு எனும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கிக்கட் டப்படட்டும். அதைப்பற்றி நமக்குக் கவலை யில்லை. ஒருபிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு அடிமைப்படுத்துவதில் ஆசைகொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும் பொறுப்பும் இல்லை. (26.11.1928 தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டு தலைமையுரையில்).

“அனாதிகாலம் தொட்டு இருப்பது வேதம், அது கடவுள் சொன்னது என்று சொல்லி ஏய்த்துவிடுவதாய் இருந்தால் அது பொருத்தமாய் இருக்க வேண்டாமா? அனாதி யாயும், கடவுள் சொன்னதுமாயிருந்தால், கட வுளால் உண்டாக்கப்பட்ட எல்லா தேசங் களுக்கும், எல்லா கண்டங்களுக்கும் இதுவே வேதமும், மதமுமாய் அல்லவா இருக்க வேண்டும்? பல்வேறு மதங்கள் இருப்பா னேன்? இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குள்ளாகவே சிலர் இவ் வேதத்தை படித்தால் கண்ணைக் குத்த வேண்டியதும், சிலர் காதினால் கேட்டால் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டியதும் எதற்காக? (குடியரசு 9.1.1927)

“வர்ணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக்கொள்கை அம லில் இருந்து வருகிறதேயொழிய,. வர்ணாசிர மம் இல்லாவிட்டால் தீண்டாமைக்கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வர்ணாசிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப்பார்த்தால் இந்தக் கொள்கை தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது.” (குடியரசு 7.8.1927)

“ஜாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படு கிறான்.. இது உண்மை; வாய்ப்பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால் மல உபாதைக்கு சென்றவன், அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்த காலை மட்டும் தண் ணீரை விட்டு கழுவிவிட்டால் அந்த குற்றம் போய்விடுவதாக கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட் டால் அவனை தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர நனைத்துக் குளித் தால் ஒழிய போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள்... ஆகவே ஜாதி வித்தியாசத் தையே அழித்தாக வேண்டும். ஜாதி வித்தி யாசத்தை போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன்வரவேண் டும். (திராவிடன் 5.10.1929)

“இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, பள்ளிக்கூடம், சாவடி முதலியவைகள் எல்லாம் ஒருவித மாக மாற்றப்பட்டு வந்துகொண்டிருப்பதாலும் இந்த கோயில்கள்தாம் சிறிதும் மாற்றுவதற்கு இடம்தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது. அத னால்தான் நாம் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோயிலுக்குள் போய்த்தீரவேண் டும் என்று கூறுகின்றேனேயொழிய, பக்திக் காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவமன் னிப்புக்காகவோ அல்லவே அல்ல. கோயி லில் சமத்துவமடைந்துவிட்டால் மற்ற காரி யங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோவிலில் பிரவேசித்து நாம் செய் யும் ஒவ்வொரு முயற்சியும் ஜாதி வித்தியா சத்தை ஒழிக்கச்செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை. இன்றையதினம் எல்லோரும் கோயிலுக்குள் ஜாதி வித்தியாசமின்றி விடப் பட்டுவிட்டார்கள் என்று ஏற்பட்டுவிட்டால் நாளையதினமே, நான், அங்கு எதற்காகப் போகின்றீர்கள்? அங்கு என்ன இருக்கின் றது? அங்கு போனதால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படுகின்றது? ஏன் உங்கள் பணத் தையும் நேரத்தையும், ஊக்கத்தையும், அறி வையும் பாழாக்குகிறீர்கள் என்று சொல்லி தடுக்கவே முயற்சிப்பேன். (குடியரசு 27.10.1929)

1933ம் வருடம் மே மாதம் 21ம் தேதி ஞாயிற் றுக்கிழமை சுயமரியா தையாரால் மே தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். உல கெங்கும் கடந்த 50 வருடமாக மேதினத்தை ஒரு பெருநாளாகத் தொழிலாளர்கள், கிருஷி கள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர் களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந் நாள் ஒன்றே உகந்ததினமாகும்.(குடியரசு 14.5.1933))

கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமை திக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதன மாகும் என்ற அறிவு-அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டெரிய ஆரம்பித் திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையா னாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத்தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெ ரிக்காவின் அணுகுண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்துகொண்டி ருக்க முடியாது. (22.2.1950)

முக்கிய நண்பர்களில் பலர் உடல்நிலை யை கவனிக்கும்படிக்கும், ஓய்வெடுத்துக் கொள்ளும்படிக்கும் எழுதிவருகிறார்கள். ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய சமயம் நமக்குத் தெரியும். அதாவது, நமது தொண்டு நாட்டுக்கு உதவாது என்றாவது, நமது தொண் டை நாட்டார் ஏற்பதில்லை என்றாவது நமக்குத் தெரிந்தால் யாரிடமும் சொல்லாம லும் நாமே ஓய்வெடுத்துக்கொள்வோம். அது வரை எடுத்துக்கொள்ளும் ஓய்வு. உண்மை யான ஓய்வாகாது (17-7-1927)

தொகுப்பு : மதுக்கூர் இராமலிங்கம்
நன்றி , தீக்கதிர்

வியாழன், 22 அக்டோபர், 2009

சமூக நீதிக்கு குழிபறிக்கும் கபில் சிபல் நாடகம்

மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசு கல்வித் துறையில் மெல்ல மெல்ல சமூக நீதியைக் கைகழுவிவிட திட்டமிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் ஒவ்வொரு பேட்டியும் ஒவ்வொரு செயலும் அதை நோக்கித்தான் அமைந்துள்ளன.


சமீபத்தில் ஐஐடி படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத பனிரெண்டாம் வகுப்பில் 60 சதம் மதிப் பெண் என்பதற்கு பதிலாக, இனிமேல் 80 சதம் என்று ஆக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தது. இதையொட்டி எதிர்ப்பு கிளம்பியதும் செய்தி ஆதாரமற்றது என்கிறார் அமைச்சர். ஆனால், அடுத்த வரியிலேயே இதைப்பற்றி ஐஐடி கவுன் சில்தான் இறுதி முடிவெடுக்கும். அதற்கான அதிகாரம் அவர்களுக்குத்தான் உண்டு என நழுவுகிறார். இதன் பொருள் ரகசியமானதல்ல. நிச் சயமாக வெகு விரைவில் 80 சதம் மதிப்பெண் என்பதை ஐஐடி கவுன்சில் அறிவிக்கும். அதில் தனக்கு சம்பந்தம் இல்லையென இப்போதே கூறி, சமூக நீதிக்கு சவக்குழி தோண்ட மண் வெட்டி கொடுத்து உதவுகிறார் கபில் சிபல்.

பத்தாம் வகுப்புக்கு தேர்வு கிடையாது என அறிவித்தபோதே குழப்பத்திற்கு அடிகோலப் பட்டுவிட்டது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தும் அதனை மத் திய பள்ளிகளில் அமலாக்க முயல்வதும், மாநி லங்களின் எதிர்ப்பை மீறி கல்வியை படிப்படி யாக மத்திய பட்டியலுக்கே கொண்டு போக கபில் சிபல் முயல்வதும் சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான முயற்சியே. இந்தியா, வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும் பிளவுண்டு கிடக்கிற சமூகம். இங்கே தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கோ ஏழை எளிய மாணவனுக்கோ உரிய அங்கீகார மும், உரிய மதிப்பும் கிடைப்பதில்லை என்பது உள்ளங்கை புண் ஆகும். இதைப் பார்க்க கண் ணாடி தேவையில்லை.

தகுதியும் திறமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத் திற்கோ மேல்தட்டு மக்களுக்கோ சொந்தமல்ல. உண்மையிலேயே மிகவும் அறிவுபூர்வமான மாணவர்கள், அவர்களின் சமூகச்சூழல் காரணமாக தங்கள் திறமையை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாமல் உள்ளனர். இதனால் அவர்களின் உண்மையான தகுதிக்கு உரிய மதிப்பெண் வெறும் மொழியால் தீர்மானிக்கப் பட்டு மறுக்கப்படுகிறது.

அடித்தட்டில் இருக்கிற மக்களை கை தூக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில் லாமல் இந்தியாவில் சம நீதி சாத்தியமில்லை. இதனை மேல்சாதி வெறி கொண்ட பாஜக ஒப்புக்கொள்வதில்லை. மண்டல் கமிஷனுக்கு எதிராக அவர்கள் நடத்திய கலவரமே இதற்கு சாட்சி. கபில் சிபலோ மென்மையான வார்த்தை களைப் பேசி ரொம்பவும் நுட்பமாக வாதாடி, நல்லது செய்வதுபோல் காட்டி சமூக நீதியை சத்தமில்லாமல் சாகடிக்கிறார்.

ஐஐடி நுழைவுத்தேர்வு சம்பந்தமாக தற்போது அப்படி திட்டம் எதுவும் இல்லை என்று கை விரித்தாலும், பொறுப்பை ஐஐடி கவுன்சிலிடமே ஒப்படைத்துவிட்டு அரசுக்கு எந்த பங்குமில்லை என்று சொல்வது திட்டமிட்ட நாடகமே.

ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்க ளுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்களித் திருப்பதும், ஐஐடியில் இட ஒதுக்கீடு கிட்டத் தட்ட கைவிடப்பட்டிருப்பதும் கண்கூடு. இந் நிலையில் அமைச்சரின் பேச்சும் செயலும் நம்பத்தகுந்ததாக இல்லை. சமூக நீதிக்கு குரல் கொடுப்பதாக மார்தட்டும் திமுக, தங்கள் கூட்டணி அமைச்சரின் செயலுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?

நன்றி: தீக்கதிர்

புதன், 21 அக்டோபர், 2009

அண்ணா மாயை!

தமிழர்கள் மீதான பிறவி இழிவைத் துடைத்தழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் இடையிலேயே பிளவுபட்டு, திசைமாறி, இறுதியில் ஆட்சியை மட்டும் கைப்பற்றி – இன்று ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கான மூல காரணமாக அரசியல் மோகத்தையும்; அதற்கு வித்திட்டவராக அண்ணாவையும் சொல்ல முடியும். அண்ணா நூற்றாண்டிற்கு ‘இந்து' நாளேடு சிறப்பிதழ் வெளியிட்டதை, இவ்வரலாற்றுத் துரோகத்திற்கான சான்றாகக் கொள்ளலாம். ஓராண்டு நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா, தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் கொண்டாட்டமாகவே சுருங்கிப் போனதற்கும் அதுதான் காரணம்.


தந்தை பெரியார் முன்னிறுத்திய கடவுள் மறுப்பை கல்வெட்டாக நாடெங்கும் வைத்தவர்கள், அதற்கு இணையாக அவர் முன்வைத்த ஜாதி, மத, அரசியல் மறுப்பை மட்டும் திட்டமிட்டு மறைத்து விட்டனர். சிந்து சமவெளித் தமிழன் மீது இழிவைத் திணித்தது இந்து மதம். இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம், அதிகார ஆட்சி வெறியில் இழிவையும் இசைவுடன் ஏற்றுக் கொண்டது. அதன் விளைவு, ‘தமிழன்' என்பது அரசியல் அடையாளமாகவும், ‘ஜாதி' என்பது சமூக, பண்பாட்டு அடையாளமாகவும் – பெருமையும் இழிவும் இரண்டறக் கலந்துவிட்டது. இம்முரண்பாட்டை அவமானமாக எண்ணி, அழித்தொழிக்க எவரும் தயாரில்லை.

திராவிடன் என்ற இன அடையாளத்துடன் விடுதலைக்காகப் போராடுவதற்கு மாறாக, திராவிட நாட்டின் ஆரியர்களையும் முன்னேற்றும் கழகம் என திரித்து, வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டதால் ஏற்பட்ட ஆபத்தை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர். அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடும் கட்சிக்கு எதிரி, அண்ணா பெயரிலேயே அமைந்துள்ள – அவருடைய நூற்றாண்டைக் கொண்டாட மறுக்கும் – ஆரியத் தலைமையிலான கட்சிதானே! இந்த முரண்நகைக்காக ‘அண்ணாயிஸ்டு'கள் வெட்கப்படுவதில்லை. தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட நிரந்தரப் பக்க விளைவு இது.

‘தி.மு.க.வை அண்ணா தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ஆட்சி அதிகாரம் தமிழனிடம் வந்திருக்குமா?' என்ற பட்டிமன்றக் கேள்விகள் அறிவின்பாற் பட்டவையல்ல; அப்பழுக்கற்ற சுயநல அரசியலின் பாற்பட்டவை. சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்திடவில்லையா? அன்று தொடக்கம் இன்றுவரையிலும் தமிழன் சூத்திரப் பட்டத்தை சுமந்து கொண்டுதானே ‘அதிகாரத்தில்' திளைக்கிறான். அய்ந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் தமிழக முதல்வரால் தன்/இனத்தின் சூத்திரப் பட்டத்தை அழிக்க முடிந்ததா? இன்னும் நூறாண்டுகளுக்கு ஆட்சியில் இருந்தால்கூட, தமிழர்கள் மீதான இழிவை அகற்றிவிட முடியாது. இந்த இன இழிவைச் சொல்லி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்குதான் தேர்தல் அரசியல் பயன்படும்.

தமிழனின் ஆட்சி என்பதற்காகப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? முப்பது கல் தொலைவில் இருக்கும் ஈழத்தில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டபோதும் தமிழனின் அதிகாரத்தால் என்ன செய்ய முடிந்தது – சில மணி நேரம் பட்டினி கிடந்து, மண்டியிட்டதைத் தவிர? போருக்குப் பிறகும் நிராயுபாணிகளாக இருக்கும் மக்கள் வதைபடுவதைத் தடுக்க – கடிதம் எழுதி, தீர்மானங்களை முன்மொழிந்து, கோரிக்கை மனுக்களை அளிப்பதற்குப் பெயர் அதிகாரம் அல்ல; அடிமைத்தனம். சட்டமன்றம் தவிர்த்த (சமூகம்/நீதிமன்றம்/அரசு எந்திரம்/ஊடகம்) பிற அதிகாரங்கள் அனைத்தும் இன்றளவும் பார்ப்பனர்களிடம்தானே இருக்கிறது.

இங்கிருக்கும் சேரித் தமிழனையாவது வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, ஆட்சி அதிகாரம் பயன்படுகிறதா? உடனே, இலவச நலத் திட்டங்கள் பட்டியலிடப்படும். வாக்கு அறுவடைக்காக, அதை காங்கிரஸ்/பா.ஜ.க. ஆட்சிகள்கூட செய்து தொலைக்கும். செந்தமிழ் நாடெங்கும் ‘உத்தப்புர சுவர்கள்' ஊரையும் சேரியையும் பிரித்து நிற்கிறதே! இச்சமூகக் கொடுமைகளை மறைப்பதற்குதான் அண்ணாவின் அரசியல் பயன்படுகிறது. அது ஒருபோதும் சமூக – பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை உய்விக்காது.

நாற்பதாண்டு கால திராவிட ஆட்சியில் ஊழலும், ஜாதியும், வாரிசு அரசியலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. வேட்பாளர் தேர்வு முதல் கட்சி நிருவாகம், ஆட்சி நிருவாகம் வரை ஜாதி அடிப்படையில் பங்கு போட்டுக் கொண்டு, மறுபுறம் எந்தக் கூச்சமுமின்றி தமிழ் நாட்டையே சமத்துவபுரமாக்கும் லட்சியத்தை அறிவிப்பது – கடைந்தெடுத்த அரசியல் கயமையல்லவா? சமூக – பண்பாட்டு ரீதியாக சமத்துவத்தை எய்தும் வரை, தமிழன் சுயமரியாதையுடன் வாழவே முடியாது. அதற்கு வக்கற்ற தமிழன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்குதான் அண்ணா மாயை!

நன்றி.தலித்முரசு ஆசிரியர்குழு
செப்-2009

செவ்வாய், 20 அக்டோபர், 2009

சமூகநீதி: விடுதலை - முரசொலி - தீக்கதிர்

கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி.டி. தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கவிடாமல் தடுப்பது பார்ப்பன சதி என்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் ‘விடுதலை’ ஏடு தலையங்கம் (செப்டம்பர் 22) தீட்டியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தீக்கதிர் ஏட்டில் “சமூக நீதியின் அளவுகோல் என்ன?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகை யில், விடுதலை ஏடு “பாறாங்கல் லை தூக்கிப் போடாதீர்” என்ற தலைப்பில் அக்டோபர் 5ம் தேதி யன்று தலையங்கம் எழுதியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காவேரி ராஜபுரத்தில் தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிலம், நீதிபதி தினகரன் குடும்பத்தார் உள்ளிட் டோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. நிலம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள விபரத்தை தீக் கதிர் முழுமையாக வெளியிட்டி ருந்தது.

நீதிபதி தினகரனால் நிலம் ஆக் கிரமிக்கப்படவில்லை என்று விடு தலையினால் மறுக்கமுடியவில்லை. மாறாக தீக்கதிருக்கு என்ன வந் தது? அதற்கு ஏன் தேள் கொட்டி யது? என்று கேள்வியெழுப்பி யுள்ளது.

தலித் மக்களின் கைகளுக்கு நிலம் வந்து சேரும்போதுதான் முழுமையான சமூக நீதி நிலை பெறும். சமூக நீதியோடு இணைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளா தார விடுதலைக்காகவும் மார்க் சிஸ்ட்டுகள் போராடுகிறார்கள்.

ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் நிலம் பறிக்கப்படும் போது, அவர்களுக்குரிய நிலம் மறுக் கப்படும்போது விடுதலைக்கு தேள் கொட்டுவதில்லை. வசதியானவர்க ளுக்கு ஒரு பிரச்சனை வந்தால் தான் சமூக நீதி கொடியைத் தூக் கிக் கொண்டு களத்திற்கு வருகி றது. இது என்ன முரண்பாடு? என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை.

உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த ஒய்.கே.சபர்வால் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது செங்கொடியினர் களத்தில் இறங்கி போராடியதுண்டா? என்று விடுதலை கேள்வியெழுப்பியுள் ளது. ஒய்.கே.சபர்வால் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோதும் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வலியுறுத் தியது.

மேலும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநி லங்களவை உறுப்பினருமான சீத் தாராம் யெச்சூரி, 2007 நவம்பர் 2ம் தேதியன்று குடியரசுத்தலைவர் பிர திபா பாட்டீலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒய்.கே.சபர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிவிசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நீதித்துறையின் நம்பகத்தன்மை யை பாதிக்கும் என்று குறிப்பிட்ட தோடு, ஒய்.கே.சபர்வால் மீதான குற்றச்சாட்டு குறித்து முழுமை யான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் இந்த விஷயத் தில் குடியரசுத்தலைவர் தலை யிடவேண்டுமென்றும் விரிவான கடிதத்தை எழுதியிருந்தார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட நீதிபதிகள், ராமசாமியாக இருந்தாலும் சரி, சபர்வாலாக இருந் தாலும் சரி, உரிய விசாரணை நடத் தப்படவேண்டும் என்பதே மார்க் சிஸ்ட் கட்சியின் நிலைபாடாக இருந்துவந்துள்ளது. ஆனால் விடு தலையோ குற்றச்சாட்டுக்கு உள்ளா னோரின் சாதி பார்த்தே நீதி பேசும்.

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையின்போது ‘நான் சங்க ராச்சாரியார் பக்தன். எனவே இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வர் கூறியபோது, தீக்கதிரின் பேனா முனை வேலை நிறுத்தம் செய்து விட்டதா? என்று விடுதலை தலை யங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியின் கூற் றை தீக்கதிர் அப்போதே விமர்சித் தது. சூழலுக்கு ஏற்ப பேனாவுக்கு ஓய்வு கொடுக்கிற பழக்கம் தீக்கதி ருக்கு இல்லை.

சங்கராச்சாரியர் குற்றம் சாட் டப்பட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கு எந்த லட்சணத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயேந் திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வழக்கு தொட ரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய அமைச்சர் ஒருவர் சங்கராச்சாரி யாரை சந்தித்தது சர்ச்சைக்குள்ளானது.

புதுவை நீதிமன்றத்தில் தமிழக அரசுதான் வழக்கை நடத்துகிறது. சங்கரராமன் குடும்பத்தார் உள் ளிட்ட சிலர், பிறழ் சாட்சிகளாக மாறி பல்டியடித்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை புரிந்துகொள்வது எளிது.

சாட்சியங்கள் கலைக்கப்படா மல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தமிழக அரசின் காவல்துறைக்கு உண்டு. ஆனால் ஒப்புக்கு வழக் கை நடத்துவதாகவே தோன்று கிறது. விடுதலையும் கூட அவ்வப்போது கவலை தெரிவிக்கவே செய்கிறது. திமுக அரசின் தவறுகளைக்கூட சப்பைக் கட்டுகட்டி சமாளித்து வரும் விடுதலை ஏடு சங்கரராமன் கொலைவழக்கு தடுமாறுவதை, தடம்மாறுவதை கண்டித்து எழுதிய தலையங்கங்கள் எத்தனை? முதல்வரிடம் நேரில் முறையீடு செய்தது உண்டா?

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். தவறிழைக்கும் நீதிபதிகளை தண் டிப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும். இதற் காக சட்ட ஆணையம் அமைக்கப் பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

புறக்கணிக்கப்பட்ட சமூகத்தி லிருந்து மேலெழுந்து வருபவர்கள் மீது பாறாங்கல்லை தூக்கிப்போடு வது தீக்கதிர் அல்ல. காவேரிராஜ புரத்தில் நிலமீட்பு போராட்டம் நடத்தும்போது, ஆக்கிரமித்தவர்கள் பட்டியலில் நீதிபதி தினகரனும் வருகிறார். விடுதலை, தினகரன் பக்கம் நிற்கிறது. தீக்கதிர், நிலத்தை இழந்தவர்கள் பக்கம் நிற்கிறது. நிலத்துக்காக போராடும் தலித்து கள் மீது விடுதலைதான் பாறாங் கல்லை தூக்கிப்போடுகிறது.

விழுப்புரம் மாவட்டம் காங்கிய னூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முயன்றபோது போலீசாரின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி, சிறைக்கொட்டடியில் மார்க்சிஸ்ட் டுகள் அடைக்கப்பட்டபோது, விடு தலை பாறாங்கல்லைப் போல பாரா முகமாய் இருந்ததைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

முரசொலி ஏடு 8.10.2009 அன்று ‘தீண்டாமைக்கு எதிராகப் போராடினால் சிறையா?’ என்ற தீக் கதிர் தலைப்பை அப்படியே தலைப் பாக்கி பெட்டிச் செய்தியொன்றை எழுதியுள்ளது.

காங்கியனூரில் ஆலய நுழை வுப் போராட்டம் நடத்த முயன்று தடியடி பட்டு ரத்தம் சிந்தி சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டி ருந்த கே.பாலகிருஷ்ணன் உள் ளிட்ட தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநிலச்செயலாளர் என். வரதராஜன், தமிழக அரசை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியிருந் தார்.

இதற்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு தினத்தந்தி மற்றும் தினமணியில் வெளியான செய்திகளை முரசொலி மேற்கோள் காட்டியிருந்தது. போராட்டக்குழு வினர், போலீசார் மீது செருப்பு மற் றும் கல்வீசியதாகவும், கேலி பேசி யதாகவும், இதனால்தான் தடியடி தாண்டவம் நடத்தப்பட்டது என்று அந்தச் செய்திகளை மேற்கோள் காட்டி முரசொலி போலீசாரின் அட் டூழியத்தை நியாயப்படுத்தியுள்ளது.

பொதுவாக போலீசார் தரும் புனைகதைகளே இத்தகைய செய் திகளாக மாறும் என்பதை பத்திரி கையாளர்கள் நன்கு உணர்வார்கள்.

அந்தப் போராட்டத்தில் பங் கேற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதாவை கீழே தள்ளி, ஒரு போலீஸ்காரர், அவர் வயிற்றில் பூட்ஸ் காலால் மூன்று முறை உதைத்ததில் அவருக்கு கடுமை யான ரத்தக் கசிவு ஏற்பட்டு, மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் என்.வரதராஜன் செய் தியாளர்களிடம் எடுத்துக்கூறினார்.

திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்களை நுழையவிடாமல் சாதி ஆதிக்க வெறியர்கள் காலங் காலமாக தடுத்துவந்ததை பின்னுக் குத்தள்ளி, போலீசாரின் தடியடி யை முரசொலி நியாயப்படுத்துகிறது என்றால், சமூக நீதிக்கான போராட் டத்தில் யார் யார் எந்தப்பக்கம் நிற்கி றார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்த சம்பவத்தை இன்னொரு கோணத்தில் பார்த்தால், தீண்டா மை ஒழிப்புப் போராட்டம் என்ற பெயரில் சட்டம்-ஒழுங்கு சீர்குலை வுக்கு திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே எழும் என்று முர சொலி கூறியுள்ளது. ஒரு கோவி லுக்குள் தலித்துகள் நுழைய முடிய வில்லை என்ற நிலை இருந்தாலே சட்டம் நிலைநிறுத்தப்படவில்லை என்றுதானே பொருள்?.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்ன பாடுபடுகிறது என்பதற்கு அன்றாடம் வெளியாகும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் செய்திகளே சாட்சி கூறும். அதிலும் ஆட்களை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டுவது, கொலை செய் வது என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துவ தில் உரிய கவனம் செலுத்தாத போலீசார், அநீதியை எதிர்த்து களத் திற்கு வரும் சமூக நீதிப் போராளி களை அடித்து நொறுக்குவதில் அதீத கவனம் செலுத்துகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயலவில் லை. மாறாக, அரசியல் சாசனத்தின் படி தீண்டாமையை கடைப்பிடிப் பது சட்டப்படி குற்றம் என்று கூறப் பட்டிருப்பதை செயல்படுத்த அரசு மறுக்கும்போது, சமூக நீதியை நிலைநாட்டவே களம் காண்கிறது.

காங்கியனூரில் மகத்தான போராட்டத்திற்குப் பிறகுதான் அரசு அதிகாரிகளே முயற்சி எடுத்து கோவிலின் கதவு தலித் மக்களுக் காக திறக்கப்பட்டிருக்கிறது. இதை அரசு ஏற்கனவே செய்திருந்தால் போராட்டத்திற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது.

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் சிவன் கோவிலிலும் ஆலய நுழைவு போராட்டம் அறி வித்து, மார்க்சிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்ட பிறகே தலித்துக ளுக்கு வழிபடும் உரிமை வழங்கு வதற்கான உடன்பாடு ஏற்பட்டிருக் கிறது. பொதுவான இடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தக்கூட போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது என்பது சமூக நீதி பேசுபவர் களின் ஆட்சிக்கு அழகு சேர்ப்ப தல்ல.

முரசொலியின் பெட்டிச் செய்தி வெளியாகியுள்ள அதே பக்கத்தில் ‘திமுக-சமூக நீதி’ என்ற நூலுக் கான விளம்பரம் வெளியிடப்பட்டுள் ளது. சமூக நீதி வெறும் விளம்பரத் திற்கு மட்டும்தானா என்ற கேள் வியை இது எழுப்புகிறது.

-மதுரை சொக்கன்

-நன்றி:தீக்கதிர்

ஞாயிறு, 24 மே, 2009

உலகின் பாதை சோசலிசமே

உலகின் பாதை சோசலிசமே -மேலாண்மை பொன்னுச்சாமி

சோசலிசம் என்ற சொல், சகலர் நெஞ் சங்களிலும் ஒரு மகத்தான ஈர்ப்பை ஏற்படுத் துகிற வசீகரமான சொல்லாக இருந்தது, 1960, 70களில்.

“இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டால், பாலாறும், தேனாறும் பாய்ந்தோடும் தெருக்க ளில். வெள்ளையராதிக்கம் அகன்று விட் டால், சமத்துவம் வந்துவிடும். ஏழை பணக் காரன் என்கிற பள்ளமேடு மறைந்து, சகல ரும் சரிநிகர் சமானமாகிவிடும்” என்றெல் லாம் அரும்பிப் பூத்த கனவுகள் யாவும் இந் தியர் மனசில் கருகிப் பொசுங்கிய காலம்.

செல்வராதிக்கமும், சாதிய ஆதிக்கமும் சிதையாமல் வளர்கிற கசப்பான நிஜம் சகலர் நெஞ்சங்களிலும் சப்பென்று அறைந்து தாக் கியது.

வேலையற்றோர்... விதியற்றோர், வாழக் கதியற்றோர், வறுமைப்பிணியுற்றோர், பசியும், பஞ்சமும், விபச்சாரமுமாக நாட்டு நிலைமை நாசமடைவதை கண்ணுற்றோர்.... “சுதந்திர காலக்கனவுகள் யாவும் காய்ந்து சருகா யிற்றே” என்று அங்கலாய்த்த காலம்.

சோவியத் யூனியன் சென்றுவிட்டு வந்த இந்தியத் தலைவர்கள், ரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராசர், நெ.து.சுந்தரவடிவேலு, தவத்திருகுன்றக்குடி அடிகளார், தந்தை பெரியார் போன்ற ஆன்றோர்கள், வந்து சான்று பகர்ந்தனர்.

“அங்கே வறுமையில்லை. வேலை யில்லை என்ற சொல்லுக்கு வேலையில்லை. கல்வியில்லை என்ற கவலையில்லை. ஏழையுமில்லை. செல்வந்தனுமில்லை. பிச்சை என்ற பேச்சில்லை. விபச்சாரம் என்கிற அபச்சாரமில்லை. திருட்டு இல்லை. உயர் பண்பும், பேரன்புமிக்க ஒரு புதிய மனி தன் - புதிய உலகம் - பூத்திருக்கிறது” என் றெல்லாம் சாட்சியம் சொன்னார்கள்.

சோசலிசம் பேசுகிற கம்யூனிஸ்ட்டுகள் அல்ல, கம்யூனிஸ்டல்லாதவர்கள் சோசலிச சமுதாய அமைப்பைக் கண்டு வந்து சொன் னார்கள்.

“முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம்.

உலகத்துக்கொரு புதுமை - வாழ்க” என்று பாரதி எனும் மகாகவியின் கனவு, அங்கே நனவென மலர்ந்திருப்பதை சொன்னார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய மண்ணில் எதை எதிர்பார்த்தனரோ... அது சோசலிச பூமியில் தழைத்திருக்கும் நிஜம் கண்டனர்.

சோசலிசம், மதுரமாக இனிக்கும் சொல் லாயிற்று. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களையும் ஈர்க்கிற வசீகர வார்த்தையாயிற்று.

இதெல்லாம், 1960, 1970களில்.

1990களில் நிலைமை தலைகீழ். சோச லிசம், ஒரு கலைந்து போன இனிய கனவாக தோற்றம் தந்தது. சோவியத் யூனியன் தகர்வும், லெனின் சிலைகளை உடைத்து தூக்குகிற கிரேனின் நகர்வும் உலக மக்களின் கனவு நெஞ்சங்களில் வெந்நீரை ஊற்றியது. பூக்க ளின் இதழ்களில் தீயின் நாக்குகள்.

சோசலிசம் என்றால், ஒரு வெற்றுச் சொல். அழகான ஏட்டுச் சுரைக்காய். காகிதத் தில் எழுதப்பட்ட சர்க்கரை. நடைமுறைக் கொவ்வாத வண்ணக் கனவு என்ற பிம்பமே மக்கள் நெஞ்சில் நின்றது.

சோவியத் யூனியனில் சோசலிசம் வெற்றி பெற்று, மக்களுக்கும், உலகுக்கும் ரட்சகனாக வல்லமை பெற்ற செய்தி... சென்று வந்த தலைவர்களால் மெல்லமெல்லப் பர வியது. நத்தை வேகப் பரவல்.

சோவியத் யூனியன் தகரப் போவதுவும், தகர்ந்துவிட்டதுவும் படுவேகப்புயலாக செய்தி பரப்பப்பட்டது. வேங்கைப் பாய்ச்ச லான பரவல்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடகங்கள் மூலமாக சோசலிசத்துக்கெதிரான பிரச்சா ரத்தை கட்டவிழ்த்துவிட்டது. புயல் வேகப் பிரச்சாரம்.

‘சோசலிசமும்’, கம்யூனிஸமும் காலாவதியாகிவிட்டது’ என்று சாமானிய மக்களையும் நம்பவைத்தது, ஊடக பலம்.

முளைத்த கால்சென்டர்களும், சாப்ட் வேர் கம்பெனிகளும், கணினி சார்ந்த தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டின் நிஜமாக கண்முன்னால் மலர மலர... ‘முதலாளித்து வம் தான் சாஸ்வதமோ’ என்று சிந்திக்க வைப்பதில் ஜெயித்தது அமெரிக்க ஆதிக்க முள்ள ஊடக ராட்சஸம்.

அமெரிக்கா... ஆஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளின் முதலாளித்துவமே சொர்க்க புரிகளாக ஜொலித்தன. முதலாளித் துவம் கருத்தியலாக மீண்டும் ஜெயித்தது, 2000களில். அதன் மையமாக நின்றது அமெ ரிக்கா.

வியட்நாமிடம் மூக்குடைபட்ட அமெ ரிக்கா, ஊடக பலத்தாலும், ராட்சஸ தந்திரத் தாலும் சோவியத் யூனியன் என்கிற மகா பீமனை சாய்த்துவிட்டது.

‘முதலாளித்துவம் வெல்லற்கரியது’ என்ற தோற்றத்தை - கருத்துருவை - ஏற் படுத்தியது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

“காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடா தீர்கள். அந்நிய மூலதனத்துக்கு நாட்டின் கதவுகளை திறக்காதீர்கள். பொதுத்துறையை சீரழிக்காதீர்கள். தனியார்மயத்தை ஊக்கு விக்காதீர்கள்” என்று பேரணிகளிலும், ஆர்ப் பாட்டங்களிலும் கரடியாக கத்துகிற கம்யூ னிஸ்ட்டுகளை கேலிப்பார்வை பார்த்துவிட்டு போக வைத்தது, ஏகாதிபத்திய ஊடக பிரச் சாரம்.

“சோசலிசத்தை தொலைத்தவர்கள்... பொதுத்துறையை காப்பாற்ற வந்துவிட்டார்கள்” என்று நக்கலும், நையாண்டியுமாக விமர் சனம் செய்ய வைத்தது; விஷமச் சிரிப்பு சிரிக்க வைத்தது.

ஒளிமயமான முதலாளித்துவத்துக்கு ஓர் உத்தரவாதமாக அமெரிக்கா ஜொலித்தது.

ஆப்கானிஸ்தானை அடித்து விழுங்கி யது அமெரிக்க ஏகாதிபத்தியம். இராக்கின் ஈரல்கறியை பிளந்து தின்றது. சதாம் உசேன் என்ற அதிபரை தூக்கிலிட்டது.

உலக மக்களின் ஆன்மா பதறவில்லை. கொதிக்கவில்லை. கொந்தளிக்கவில்லை. “வெற்றி பெறுகிற முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், விஸ்தரிப்பும் இப்படித்தான் இருக்கும்” என்று உலகை நம்ப வைத்தது.

“வெல்லற்கரிய முதலாளித்துவம்” என்ற கருத்துருவை வலுவாக்கி முன்நிறுத்துகிற உத்தரவாதமாக உயர்ந்துநின்ற அமெரிக்கா, இப்போது திவாலாகிக்கிடக்கிறது.

வெல்லற்கரிய முதலாளித்துவம் விலா எலும்பு முறிந்து தண்டுவடம் உடைந்து வீழ்ந்து கிடக்கிறது.

அமெரிக்காவின் ராட்சஸ வங்கிகள் மூர்ச்சையாகிக்கிடக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய நிதி மூலதன வங்கியான லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலாகிவிட்டது. வேறு சில ராட்சஸ வங்கிகளும் ‘புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே’ சடசடவென சரிந்து வீழ்ந்தன.

அமெரிக்கப் பொருளாதாரமே அடிமரம் வெட்டுண்டதைப்போல சாய்ந்துகிடக்கிறது. பங்குச் சந்தையில் வீழ்ச்சி. கம்பெனிகள் திவாலாகின்றன. லட்சக்கணக்கில் ஊதியம் பெற்றோர் லட்சக்கணக்கில் பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர். ரியல் எஸ்டேட் பிசி னஸே பொய்யாய் பழங்கதையாயிற்று. அமெ ரிக்காவில் வீடற்றோர் சட்டென்று பெருகி விட்டனர். வீடுகளை வாங்குவாருமில்லை. விற்பாருமில்லை. கொள்வாருமில்லை. கொடுப்பாருமில்லை.

தூங்கியெழுந்தவுடன் கலைகிற கனவு களைப் போல, அமெரிக்கச் சொர்க்கபுரி சட்டென்று மாயமாயிற்று.

சோவியத் யூனியன் சரிந்தபோது ஆர வாரமும், ஆர்ப்பாட்டமுமாக கூச்சலிட்டு மகிழ்ந்து கூத்தாடிய ஊடகங்கள், இப்போது முதலாளித்துவம் எனும் ‘வெல்லற்கரிய சாஸ்வதம்’ சரிந்து நொறுங்கி வீழ்வதை கண்டும் காணாமலிருக்கிறது.

அரசின் கையில் தொழிலோ - நிதியோ - இருக்கவே கூடாது என்கிற சித்தாந்தத்தை பற்றிக் கொண்டிருந்த அமெரிக்க அரசு, சரிகிற தனியார் முதலாளிகளின் நிதிச் சரிவை சமாளிக்க சித்தாந்தத்தை கைகழுவிவிட்டு... அமெரிக்க அரசின் நிதியாதாரத்தின்மூலம் சரிக்கட்ட ஏற்பாடாகிறது.

பொதுத்துறையே ஆகாது என்கிற அமெ ரிக்க முதலாளித்துவச் சித்தாந்தம் உலக ளாவிய அளவில் தோல்வியடைந்து நிற் பதை கண்டுணர்ந்து சொல்லுகிற திராணி, ஊடகங்களுக்கு இல்லை.

‘சோசலிசம் ஏட்டுச் சுரைக்காய்.... காலா வதியான கனவு’ என்றெல்லாம் முழங்கிய ஊடகங்கள், “முதலாளித்துவமும் சாஸ்வத மல்ல... அதுவும் சரியும்” என்ற கண்ணைக் குத்துகிற உண்மையைக் கூட காணாமல் மவுனம் காப்பது, ஆச்சரியமாக இருக்கிறது.

இப்போதும் சோசலிசமே நிரந்தரமான மக்கள் சமத்துவ சமுதாயமாக இருக்கும் என்பதை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற சீனா உலகத்துக்கு நிரூபிக்கிறது. 2009ம் ஆண்டை சோசலிசப் புரட்சியாக உலகு தழுவிக் கொண்டாடுவோம் என்று புரட்சிகரக் கம்பீரமாக முழங்குகிற வெனிசுலா அதிபர் சாவேஸ் அவர்களின் குரல், உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

“சீனப்புரட்சியின் அறுபதாம் ஆண்டு, கியூபாப் புரட்சியின் ஐம்பதாம் ஆண்டு, வெனிசுலாவின் பொலிவாரியப்புரட்சியின் பத்தாம் ஆண்டும் 2009ம் ஆண்டு. ஆகவே, உலகின் பாதை சோசலிசம்தான் என்ற பிர கடனத்துடன் 2009ம் ஆண்டை சோசலிச உலகப் புரட்சி ஆண்டாக கொண்டாடுவோம்” என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் முழங்கி யிருப்பதை எந்த ஊடகமும் பிரதிபலிக்க வில்லை.

லெனின் சிலையை உடைத்து கிரேன் தூக்கிய காட்சியை மாறி மாறி மாறி மாறி ஓயாமல் காட்டி மகிழ்ந்து கூத்தாடிய ஊட கம், சாவேஸின் வீரமுழக்கத்தை ஒளிபரப்பா மல் மவுனம் கடைப்பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

உலக வரலாற்றுச் சக்கரத்தின் சுழற்சி யை ஊடகங்கள் நிறுத்திவைத்து விட முடி யாது. வைகறைப் பொழுதில் சூரியோதய நிச் சயம் போல... ஊடகங்களைக் கடந்தும் உலக வரலாறு சுழலும்.

‘சோசலிசமே உலகின் எதிர்கால பாதை’ என்பதை உலகுக்கும், ஊடகத்துக்கும் உணர்த்தும்.