சோசலிசம் என்ற சொல், சகலர் நெஞ் சங்களிலும் ஒரு மகத்தான ஈர்ப்பை ஏற்படுத் துகிற வசீகரமான சொல்லாக இருந்தது, 1960, 70களில்.
“இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டால், பாலாறும், தேனாறும் பாய்ந்தோடும் தெருக்க ளில். வெள்ளையராதிக்கம் அகன்று விட் டால், சமத்துவம் வந்துவிடும். ஏழை பணக் காரன் என்கிற பள்ளமேடு மறைந்து, சகல ரும் சரிநிகர் சமானமாகிவிடும்” என்றெல் லாம் அரும்பிப் பூத்த கனவுகள் யாவும் இந் தியர் மனசில் கருகிப் பொசுங்கிய காலம்.
செல்வராதிக்கமும், சாதிய ஆதிக்கமும் சிதையாமல் வளர்கிற கசப்பான நிஜம் சகலர் நெஞ்சங்களிலும் சப்பென்று அறைந்து தாக் கியது.
வேலையற்றோர்... விதியற்றோர், வாழக் கதியற்றோர், வறுமைப்பிணியுற்றோர், பசியும், பஞ்சமும், விபச்சாரமுமாக நாட்டு நிலைமை நாசமடைவதை கண்ணுற்றோர்.... “சுதந்திர காலக்கனவுகள் யாவும் காய்ந்து சருகா யிற்றே” என்று அங்கலாய்த்த காலம்.
சோவியத் யூனியன் சென்றுவிட்டு வந்த இந்தியத் தலைவர்கள், ரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராசர், நெ.து.சுந்தரவடிவேலு, தவத்திருகுன்றக்குடி அடிகளார், தந்தை பெரியார் போன்ற ஆன்றோர்கள், வந்து சான்று பகர்ந்தனர்.
“அங்கே வறுமையில்லை. வேலை யில்லை என்ற சொல்லுக்கு வேலையில்லை. கல்வியில்லை என்ற கவலையில்லை. ஏழையுமில்லை. செல்வந்தனுமில்லை. பிச்சை என்ற பேச்சில்லை. விபச்சாரம் என்கிற அபச்சாரமில்லை. திருட்டு இல்லை. உயர் பண்பும், பேரன்புமிக்க ஒரு புதிய மனி தன் - புதிய உலகம் - பூத்திருக்கிறது” என் றெல்லாம் சாட்சியம் சொன்னார்கள்.
சோசலிசம் பேசுகிற கம்யூனிஸ்ட்டுகள் அல்ல, கம்யூனிஸ்டல்லாதவர்கள் சோசலிச சமுதாய அமைப்பைக் கண்டு வந்து சொன் னார்கள்.
“முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம்.
உலகத்துக்கொரு புதுமை - வாழ்க” என்று பாரதி எனும் மகாகவியின் கனவு, அங்கே நனவென மலர்ந்திருப்பதை சொன்னார்கள்.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய மண்ணில் எதை எதிர்பார்த்தனரோ... அது சோசலிச பூமியில் தழைத்திருக்கும் நிஜம் கண்டனர்.
சோசலிசம், மதுரமாக இனிக்கும் சொல் லாயிற்று. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களையும் ஈர்க்கிற வசீகர வார்த்தையாயிற்று.
இதெல்லாம், 1960, 1970களில்.
1990களில் நிலைமை தலைகீழ். சோச லிசம், ஒரு கலைந்து போன இனிய கனவாக தோற்றம் தந்தது. சோவியத் யூனியன் தகர்வும், லெனின் சிலைகளை உடைத்து தூக்குகிற கிரேனின் நகர்வும் உலக மக்களின் கனவு நெஞ்சங்களில் வெந்நீரை ஊற்றியது. பூக்க ளின் இதழ்களில் தீயின் நாக்குகள்.
சோசலிசம் என்றால், ஒரு வெற்றுச் சொல். அழகான ஏட்டுச் சுரைக்காய். காகிதத் தில் எழுதப்பட்ட சர்க்கரை. நடைமுறைக் கொவ்வாத வண்ணக் கனவு என்ற பிம்பமே மக்கள் நெஞ்சில் நின்றது.
சோவியத் யூனியனில் சோசலிசம் வெற்றி பெற்று, மக்களுக்கும், உலகுக்கும் ரட்சகனாக வல்லமை பெற்ற செய்தி... சென்று வந்த தலைவர்களால் மெல்லமெல்லப் பர வியது. நத்தை வேகப் பரவல்.
சோவியத் யூனியன் தகரப் போவதுவும், தகர்ந்துவிட்டதுவும் படுவேகப்புயலாக செய்தி பரப்பப்பட்டது. வேங்கைப் பாய்ச்ச லான பரவல்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடகங்கள் மூலமாக சோசலிசத்துக்கெதிரான பிரச்சா ரத்தை கட்டவிழ்த்துவிட்டது. புயல் வேகப் பிரச்சாரம்.
‘சோசலிசமும்’, கம்யூனிஸமும் காலாவதியாகிவிட்டது’ என்று சாமானிய மக்களையும் நம்பவைத்தது, ஊடக பலம்.
முளைத்த கால்சென்டர்களும், சாப்ட் வேர் கம்பெனிகளும், கணினி சார்ந்த தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டின் நிஜமாக கண்முன்னால் மலர மலர... ‘முதலாளித்து வம் தான் சாஸ்வதமோ’ என்று சிந்திக்க வைப்பதில் ஜெயித்தது அமெரிக்க ஆதிக்க முள்ள ஊடக ராட்சஸம்.
அமெரிக்கா... ஆஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளின் முதலாளித்துவமே சொர்க்க புரிகளாக ஜொலித்தன. முதலாளித் துவம் கருத்தியலாக மீண்டும் ஜெயித்தது, 2000களில். அதன் மையமாக நின்றது அமெ ரிக்கா.
வியட்நாமிடம் மூக்குடைபட்ட அமெ ரிக்கா, ஊடக பலத்தாலும், ராட்சஸ தந்திரத் தாலும் சோவியத் யூனியன் என்கிற மகா பீமனை சாய்த்துவிட்டது.
‘முதலாளித்துவம் வெல்லற்கரியது’ என்ற தோற்றத்தை - கருத்துருவை - ஏற் படுத்தியது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.
“காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடா தீர்கள். அந்நிய மூலதனத்துக்கு நாட்டின் கதவுகளை திறக்காதீர்கள். பொதுத்துறையை சீரழிக்காதீர்கள். தனியார்மயத்தை ஊக்கு விக்காதீர்கள்” என்று பேரணிகளிலும், ஆர்ப் பாட்டங்களிலும் கரடியாக கத்துகிற கம்யூ னிஸ்ட்டுகளை கேலிப்பார்வை பார்த்துவிட்டு போக வைத்தது, ஏகாதிபத்திய ஊடக பிரச் சாரம்.
“சோசலிசத்தை தொலைத்தவர்கள்... பொதுத்துறையை காப்பாற்ற வந்துவிட்டார்கள்” என்று நக்கலும், நையாண்டியுமாக விமர் சனம் செய்ய வைத்தது; விஷமச் சிரிப்பு சிரிக்க வைத்தது.
ஒளிமயமான முதலாளித்துவத்துக்கு ஓர் உத்தரவாதமாக அமெரிக்கா ஜொலித்தது.
ஆப்கானிஸ்தானை அடித்து விழுங்கி யது அமெரிக்க ஏகாதிபத்தியம். இராக்கின் ஈரல்கறியை பிளந்து தின்றது. சதாம் உசேன் என்ற அதிபரை தூக்கிலிட்டது.
உலக மக்களின் ஆன்மா பதறவில்லை. கொதிக்கவில்லை. கொந்தளிக்கவில்லை. “வெற்றி பெறுகிற முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், விஸ்தரிப்பும் இப்படித்தான் இருக்கும்” என்று உலகை நம்ப வைத்தது.
“வெல்லற்கரிய முதலாளித்துவம்” என்ற கருத்துருவை வலுவாக்கி முன்நிறுத்துகிற உத்தரவாதமாக உயர்ந்துநின்ற அமெரிக்கா, இப்போது திவாலாகிக்கிடக்கிறது.
வெல்லற்கரிய முதலாளித்துவம் விலா எலும்பு முறிந்து தண்டுவடம் உடைந்து வீழ்ந்து கிடக்கிறது.
அமெரிக்காவின் ராட்சஸ வங்கிகள் மூர்ச்சையாகிக்கிடக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய நிதி மூலதன வங்கியான லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலாகிவிட்டது. வேறு சில ராட்சஸ வங்கிகளும் ‘புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே’ சடசடவென சரிந்து வீழ்ந்தன.
அமெரிக்கப் பொருளாதாரமே அடிமரம் வெட்டுண்டதைப்போல சாய்ந்துகிடக்கிறது. பங்குச் சந்தையில் வீழ்ச்சி. கம்பெனிகள் திவாலாகின்றன. லட்சக்கணக்கில் ஊதியம் பெற்றோர் லட்சக்கணக்கில் பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர். ரியல் எஸ்டேட் பிசி னஸே பொய்யாய் பழங்கதையாயிற்று. அமெ ரிக்காவில் வீடற்றோர் சட்டென்று பெருகி விட்டனர். வீடுகளை வாங்குவாருமில்லை. விற்பாருமில்லை. கொள்வாருமில்லை. கொடுப்பாருமில்லை.
தூங்கியெழுந்தவுடன் கலைகிற கனவு களைப் போல, அமெரிக்கச் சொர்க்கபுரி சட்டென்று மாயமாயிற்று.
சோவியத் யூனியன் சரிந்தபோது ஆர வாரமும், ஆர்ப்பாட்டமுமாக கூச்சலிட்டு மகிழ்ந்து கூத்தாடிய ஊடகங்கள், இப்போது முதலாளித்துவம் எனும் ‘வெல்லற்கரிய சாஸ்வதம்’ சரிந்து நொறுங்கி வீழ்வதை கண்டும் காணாமலிருக்கிறது.
அரசின் கையில் தொழிலோ - நிதியோ - இருக்கவே கூடாது என்கிற சித்தாந்தத்தை பற்றிக் கொண்டிருந்த அமெரிக்க அரசு, சரிகிற தனியார் முதலாளிகளின் நிதிச் சரிவை சமாளிக்க சித்தாந்தத்தை கைகழுவிவிட்டு... அமெரிக்க அரசின் நிதியாதாரத்தின்மூலம் சரிக்கட்ட ஏற்பாடாகிறது.
பொதுத்துறையே ஆகாது என்கிற அமெ ரிக்க முதலாளித்துவச் சித்தாந்தம் உலக ளாவிய அளவில் தோல்வியடைந்து நிற் பதை கண்டுணர்ந்து சொல்லுகிற திராணி, ஊடகங்களுக்கு இல்லை.
‘சோசலிசம் ஏட்டுச் சுரைக்காய்.... காலா வதியான கனவு’ என்றெல்லாம் முழங்கிய ஊடகங்கள், “முதலாளித்துவமும் சாஸ்வத மல்ல... அதுவும் சரியும்” என்ற கண்ணைக் குத்துகிற உண்மையைக் கூட காணாமல் மவுனம் காப்பது, ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போதும் சோசலிசமே நிரந்தரமான மக்கள் சமத்துவ சமுதாயமாக இருக்கும் என்பதை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற சீனா உலகத்துக்கு நிரூபிக்கிறது. 2009ம் ஆண்டை சோசலிசப் புரட்சியாக உலகு தழுவிக் கொண்டாடுவோம் என்று புரட்சிகரக் கம்பீரமாக முழங்குகிற வெனிசுலா அதிபர் சாவேஸ் அவர்களின் குரல், உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
“சீனப்புரட்சியின் அறுபதாம் ஆண்டு, கியூபாப் புரட்சியின் ஐம்பதாம் ஆண்டு, வெனிசுலாவின் பொலிவாரியப்புரட்சியின் பத்தாம் ஆண்டும் 2009ம் ஆண்டு. ஆகவே, உலகின் பாதை சோசலிசம்தான் என்ற பிர கடனத்துடன் 2009ம் ஆண்டை சோசலிச உலகப் புரட்சி ஆண்டாக கொண்டாடுவோம்” என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் முழங்கி யிருப்பதை எந்த ஊடகமும் பிரதிபலிக்க வில்லை.
லெனின் சிலையை உடைத்து கிரேன் தூக்கிய காட்சியை மாறி மாறி மாறி மாறி ஓயாமல் காட்டி மகிழ்ந்து கூத்தாடிய ஊட கம், சாவேஸின் வீரமுழக்கத்தை ஒளிபரப்பா மல் மவுனம் கடைப்பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
உலக வரலாற்றுச் சக்கரத்தின் சுழற்சி யை ஊடகங்கள் நிறுத்திவைத்து விட முடி யாது. வைகறைப் பொழுதில் சூரியோதய நிச் சயம் போல... ஊடகங்களைக் கடந்தும் உலக வரலாறு சுழலும்.
‘சோசலிசமே உலகின் எதிர்கால பாதை’ என்பதை உலகுக்கும், ஊடகத்துக்கும் உணர்த்தும்.
ஞாயிறு, 24 மே, 2009
உலகின் பாதை சோசலிசமே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)