வியாழன், 22 அக்டோபர், 2009

சமூக நீதிக்கு குழிபறிக்கும் கபில் சிபல் நாடகம்

மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசு கல்வித் துறையில் மெல்ல மெல்ல சமூக நீதியைக் கைகழுவிவிட திட்டமிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் ஒவ்வொரு பேட்டியும் ஒவ்வொரு செயலும் அதை நோக்கித்தான் அமைந்துள்ளன.


சமீபத்தில் ஐஐடி படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத பனிரெண்டாம் வகுப்பில் 60 சதம் மதிப் பெண் என்பதற்கு பதிலாக, இனிமேல் 80 சதம் என்று ஆக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தது. இதையொட்டி எதிர்ப்பு கிளம்பியதும் செய்தி ஆதாரமற்றது என்கிறார் அமைச்சர். ஆனால், அடுத்த வரியிலேயே இதைப்பற்றி ஐஐடி கவுன் சில்தான் இறுதி முடிவெடுக்கும். அதற்கான அதிகாரம் அவர்களுக்குத்தான் உண்டு என நழுவுகிறார். இதன் பொருள் ரகசியமானதல்ல. நிச் சயமாக வெகு விரைவில் 80 சதம் மதிப்பெண் என்பதை ஐஐடி கவுன்சில் அறிவிக்கும். அதில் தனக்கு சம்பந்தம் இல்லையென இப்போதே கூறி, சமூக நீதிக்கு சவக்குழி தோண்ட மண் வெட்டி கொடுத்து உதவுகிறார் கபில் சிபல்.

பத்தாம் வகுப்புக்கு தேர்வு கிடையாது என அறிவித்தபோதே குழப்பத்திற்கு அடிகோலப் பட்டுவிட்டது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தும் அதனை மத் திய பள்ளிகளில் அமலாக்க முயல்வதும், மாநி லங்களின் எதிர்ப்பை மீறி கல்வியை படிப்படி யாக மத்திய பட்டியலுக்கே கொண்டு போக கபில் சிபல் முயல்வதும் சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான முயற்சியே. இந்தியா, வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும் பிளவுண்டு கிடக்கிற சமூகம். இங்கே தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கோ ஏழை எளிய மாணவனுக்கோ உரிய அங்கீகார மும், உரிய மதிப்பும் கிடைப்பதில்லை என்பது உள்ளங்கை புண் ஆகும். இதைப் பார்க்க கண் ணாடி தேவையில்லை.

தகுதியும் திறமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத் திற்கோ மேல்தட்டு மக்களுக்கோ சொந்தமல்ல. உண்மையிலேயே மிகவும் அறிவுபூர்வமான மாணவர்கள், அவர்களின் சமூகச்சூழல் காரணமாக தங்கள் திறமையை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாமல் உள்ளனர். இதனால் அவர்களின் உண்மையான தகுதிக்கு உரிய மதிப்பெண் வெறும் மொழியால் தீர்மானிக்கப் பட்டு மறுக்கப்படுகிறது.

அடித்தட்டில் இருக்கிற மக்களை கை தூக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில் லாமல் இந்தியாவில் சம நீதி சாத்தியமில்லை. இதனை மேல்சாதி வெறி கொண்ட பாஜக ஒப்புக்கொள்வதில்லை. மண்டல் கமிஷனுக்கு எதிராக அவர்கள் நடத்திய கலவரமே இதற்கு சாட்சி. கபில் சிபலோ மென்மையான வார்த்தை களைப் பேசி ரொம்பவும் நுட்பமாக வாதாடி, நல்லது செய்வதுபோல் காட்டி சமூக நீதியை சத்தமில்லாமல் சாகடிக்கிறார்.

ஐஐடி நுழைவுத்தேர்வு சம்பந்தமாக தற்போது அப்படி திட்டம் எதுவும் இல்லை என்று கை விரித்தாலும், பொறுப்பை ஐஐடி கவுன்சிலிடமே ஒப்படைத்துவிட்டு அரசுக்கு எந்த பங்குமில்லை என்று சொல்வது திட்டமிட்ட நாடகமே.

ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்க ளுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்களித் திருப்பதும், ஐஐடியில் இட ஒதுக்கீடு கிட்டத் தட்ட கைவிடப்பட்டிருப்பதும் கண்கூடு. இந் நிலையில் அமைச்சரின் பேச்சும் செயலும் நம்பத்தகுந்ததாக இல்லை. சமூக நீதிக்கு குரல் கொடுப்பதாக மார்தட்டும் திமுக, தங்கள் கூட்டணி அமைச்சரின் செயலுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?

நன்றி: தீக்கதிர்

புதன், 21 அக்டோபர், 2009

அண்ணா மாயை!

தமிழர்கள் மீதான பிறவி இழிவைத் துடைத்தழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் இடையிலேயே பிளவுபட்டு, திசைமாறி, இறுதியில் ஆட்சியை மட்டும் கைப்பற்றி – இன்று ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கான மூல காரணமாக அரசியல் மோகத்தையும்; அதற்கு வித்திட்டவராக அண்ணாவையும் சொல்ல முடியும். அண்ணா நூற்றாண்டிற்கு ‘இந்து' நாளேடு சிறப்பிதழ் வெளியிட்டதை, இவ்வரலாற்றுத் துரோகத்திற்கான சான்றாகக் கொள்ளலாம். ஓராண்டு நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா, தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் கொண்டாட்டமாகவே சுருங்கிப் போனதற்கும் அதுதான் காரணம்.


தந்தை பெரியார் முன்னிறுத்திய கடவுள் மறுப்பை கல்வெட்டாக நாடெங்கும் வைத்தவர்கள், அதற்கு இணையாக அவர் முன்வைத்த ஜாதி, மத, அரசியல் மறுப்பை மட்டும் திட்டமிட்டு மறைத்து விட்டனர். சிந்து சமவெளித் தமிழன் மீது இழிவைத் திணித்தது இந்து மதம். இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம், அதிகார ஆட்சி வெறியில் இழிவையும் இசைவுடன் ஏற்றுக் கொண்டது. அதன் விளைவு, ‘தமிழன்' என்பது அரசியல் அடையாளமாகவும், ‘ஜாதி' என்பது சமூக, பண்பாட்டு அடையாளமாகவும் – பெருமையும் இழிவும் இரண்டறக் கலந்துவிட்டது. இம்முரண்பாட்டை அவமானமாக எண்ணி, அழித்தொழிக்க எவரும் தயாரில்லை.

திராவிடன் என்ற இன அடையாளத்துடன் விடுதலைக்காகப் போராடுவதற்கு மாறாக, திராவிட நாட்டின் ஆரியர்களையும் முன்னேற்றும் கழகம் என திரித்து, வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டதால் ஏற்பட்ட ஆபத்தை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர். அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடும் கட்சிக்கு எதிரி, அண்ணா பெயரிலேயே அமைந்துள்ள – அவருடைய நூற்றாண்டைக் கொண்டாட மறுக்கும் – ஆரியத் தலைமையிலான கட்சிதானே! இந்த முரண்நகைக்காக ‘அண்ணாயிஸ்டு'கள் வெட்கப்படுவதில்லை. தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட நிரந்தரப் பக்க விளைவு இது.

‘தி.மு.க.வை அண்ணா தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ஆட்சி அதிகாரம் தமிழனிடம் வந்திருக்குமா?' என்ற பட்டிமன்றக் கேள்விகள் அறிவின்பாற் பட்டவையல்ல; அப்பழுக்கற்ற சுயநல அரசியலின் பாற்பட்டவை. சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்திடவில்லையா? அன்று தொடக்கம் இன்றுவரையிலும் தமிழன் சூத்திரப் பட்டத்தை சுமந்து கொண்டுதானே ‘அதிகாரத்தில்' திளைக்கிறான். அய்ந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் தமிழக முதல்வரால் தன்/இனத்தின் சூத்திரப் பட்டத்தை அழிக்க முடிந்ததா? இன்னும் நூறாண்டுகளுக்கு ஆட்சியில் இருந்தால்கூட, தமிழர்கள் மீதான இழிவை அகற்றிவிட முடியாது. இந்த இன இழிவைச் சொல்லி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்குதான் தேர்தல் அரசியல் பயன்படும்.

தமிழனின் ஆட்சி என்பதற்காகப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? முப்பது கல் தொலைவில் இருக்கும் ஈழத்தில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டபோதும் தமிழனின் அதிகாரத்தால் என்ன செய்ய முடிந்தது – சில மணி நேரம் பட்டினி கிடந்து, மண்டியிட்டதைத் தவிர? போருக்குப் பிறகும் நிராயுபாணிகளாக இருக்கும் மக்கள் வதைபடுவதைத் தடுக்க – கடிதம் எழுதி, தீர்மானங்களை முன்மொழிந்து, கோரிக்கை மனுக்களை அளிப்பதற்குப் பெயர் அதிகாரம் அல்ல; அடிமைத்தனம். சட்டமன்றம் தவிர்த்த (சமூகம்/நீதிமன்றம்/அரசு எந்திரம்/ஊடகம்) பிற அதிகாரங்கள் அனைத்தும் இன்றளவும் பார்ப்பனர்களிடம்தானே இருக்கிறது.

இங்கிருக்கும் சேரித் தமிழனையாவது வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, ஆட்சி அதிகாரம் பயன்படுகிறதா? உடனே, இலவச நலத் திட்டங்கள் பட்டியலிடப்படும். வாக்கு அறுவடைக்காக, அதை காங்கிரஸ்/பா.ஜ.க. ஆட்சிகள்கூட செய்து தொலைக்கும். செந்தமிழ் நாடெங்கும் ‘உத்தப்புர சுவர்கள்' ஊரையும் சேரியையும் பிரித்து நிற்கிறதே! இச்சமூகக் கொடுமைகளை மறைப்பதற்குதான் அண்ணாவின் அரசியல் பயன்படுகிறது. அது ஒருபோதும் சமூக – பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை உய்விக்காது.

நாற்பதாண்டு கால திராவிட ஆட்சியில் ஊழலும், ஜாதியும், வாரிசு அரசியலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. வேட்பாளர் தேர்வு முதல் கட்சி நிருவாகம், ஆட்சி நிருவாகம் வரை ஜாதி அடிப்படையில் பங்கு போட்டுக் கொண்டு, மறுபுறம் எந்தக் கூச்சமுமின்றி தமிழ் நாட்டையே சமத்துவபுரமாக்கும் லட்சியத்தை அறிவிப்பது – கடைந்தெடுத்த அரசியல் கயமையல்லவா? சமூக – பண்பாட்டு ரீதியாக சமத்துவத்தை எய்தும் வரை, தமிழன் சுயமரியாதையுடன் வாழவே முடியாது. அதற்கு வக்கற்ற தமிழன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்குதான் அண்ணா மாயை!

நன்றி.தலித்முரசு ஆசிரியர்குழு
செப்-2009

செவ்வாய், 20 அக்டோபர், 2009

சமூகநீதி: விடுதலை - முரசொலி - தீக்கதிர்

கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி.டி. தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கவிடாமல் தடுப்பது பார்ப்பன சதி என்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் ‘விடுதலை’ ஏடு தலையங்கம் (செப்டம்பர் 22) தீட்டியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தீக்கதிர் ஏட்டில் “சமூக நீதியின் அளவுகோல் என்ன?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகை யில், விடுதலை ஏடு “பாறாங்கல் லை தூக்கிப் போடாதீர்” என்ற தலைப்பில் அக்டோபர் 5ம் தேதி யன்று தலையங்கம் எழுதியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காவேரி ராஜபுரத்தில் தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிலம், நீதிபதி தினகரன் குடும்பத்தார் உள்ளிட் டோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. நிலம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள விபரத்தை தீக் கதிர் முழுமையாக வெளியிட்டி ருந்தது.

நீதிபதி தினகரனால் நிலம் ஆக் கிரமிக்கப்படவில்லை என்று விடு தலையினால் மறுக்கமுடியவில்லை. மாறாக தீக்கதிருக்கு என்ன வந் தது? அதற்கு ஏன் தேள் கொட்டி யது? என்று கேள்வியெழுப்பி யுள்ளது.

தலித் மக்களின் கைகளுக்கு நிலம் வந்து சேரும்போதுதான் முழுமையான சமூக நீதி நிலை பெறும். சமூக நீதியோடு இணைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளா தார விடுதலைக்காகவும் மார்க் சிஸ்ட்டுகள் போராடுகிறார்கள்.

ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் நிலம் பறிக்கப்படும் போது, அவர்களுக்குரிய நிலம் மறுக் கப்படும்போது விடுதலைக்கு தேள் கொட்டுவதில்லை. வசதியானவர்க ளுக்கு ஒரு பிரச்சனை வந்தால் தான் சமூக நீதி கொடியைத் தூக் கிக் கொண்டு களத்திற்கு வருகி றது. இது என்ன முரண்பாடு? என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை.

உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த ஒய்.கே.சபர்வால் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது செங்கொடியினர் களத்தில் இறங்கி போராடியதுண்டா? என்று விடுதலை கேள்வியெழுப்பியுள் ளது. ஒய்.கே.சபர்வால் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோதும் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வலியுறுத் தியது.

மேலும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநி லங்களவை உறுப்பினருமான சீத் தாராம் யெச்சூரி, 2007 நவம்பர் 2ம் தேதியன்று குடியரசுத்தலைவர் பிர திபா பாட்டீலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒய்.கே.சபர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிவிசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நீதித்துறையின் நம்பகத்தன்மை யை பாதிக்கும் என்று குறிப்பிட்ட தோடு, ஒய்.கே.சபர்வால் மீதான குற்றச்சாட்டு குறித்து முழுமை யான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் இந்த விஷயத் தில் குடியரசுத்தலைவர் தலை யிடவேண்டுமென்றும் விரிவான கடிதத்தை எழுதியிருந்தார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட நீதிபதிகள், ராமசாமியாக இருந்தாலும் சரி, சபர்வாலாக இருந் தாலும் சரி, உரிய விசாரணை நடத் தப்படவேண்டும் என்பதே மார்க் சிஸ்ட் கட்சியின் நிலைபாடாக இருந்துவந்துள்ளது. ஆனால் விடு தலையோ குற்றச்சாட்டுக்கு உள்ளா னோரின் சாதி பார்த்தே நீதி பேசும்.

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையின்போது ‘நான் சங்க ராச்சாரியார் பக்தன். எனவே இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வர் கூறியபோது, தீக்கதிரின் பேனா முனை வேலை நிறுத்தம் செய்து விட்டதா? என்று விடுதலை தலை யங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியின் கூற் றை தீக்கதிர் அப்போதே விமர்சித் தது. சூழலுக்கு ஏற்ப பேனாவுக்கு ஓய்வு கொடுக்கிற பழக்கம் தீக்கதி ருக்கு இல்லை.

சங்கராச்சாரியர் குற்றம் சாட் டப்பட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கு எந்த லட்சணத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயேந் திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வழக்கு தொட ரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய அமைச்சர் ஒருவர் சங்கராச்சாரி யாரை சந்தித்தது சர்ச்சைக்குள்ளானது.

புதுவை நீதிமன்றத்தில் தமிழக அரசுதான் வழக்கை நடத்துகிறது. சங்கரராமன் குடும்பத்தார் உள் ளிட்ட சிலர், பிறழ் சாட்சிகளாக மாறி பல்டியடித்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை புரிந்துகொள்வது எளிது.

சாட்சியங்கள் கலைக்கப்படா மல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தமிழக அரசின் காவல்துறைக்கு உண்டு. ஆனால் ஒப்புக்கு வழக் கை நடத்துவதாகவே தோன்று கிறது. விடுதலையும் கூட அவ்வப்போது கவலை தெரிவிக்கவே செய்கிறது. திமுக அரசின் தவறுகளைக்கூட சப்பைக் கட்டுகட்டி சமாளித்து வரும் விடுதலை ஏடு சங்கரராமன் கொலைவழக்கு தடுமாறுவதை, தடம்மாறுவதை கண்டித்து எழுதிய தலையங்கங்கள் எத்தனை? முதல்வரிடம் நேரில் முறையீடு செய்தது உண்டா?

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். தவறிழைக்கும் நீதிபதிகளை தண் டிப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும். இதற் காக சட்ட ஆணையம் அமைக்கப் பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

புறக்கணிக்கப்பட்ட சமூகத்தி லிருந்து மேலெழுந்து வருபவர்கள் மீது பாறாங்கல்லை தூக்கிப்போடு வது தீக்கதிர் அல்ல. காவேரிராஜ புரத்தில் நிலமீட்பு போராட்டம் நடத்தும்போது, ஆக்கிரமித்தவர்கள் பட்டியலில் நீதிபதி தினகரனும் வருகிறார். விடுதலை, தினகரன் பக்கம் நிற்கிறது. தீக்கதிர், நிலத்தை இழந்தவர்கள் பக்கம் நிற்கிறது. நிலத்துக்காக போராடும் தலித்து கள் மீது விடுதலைதான் பாறாங் கல்லை தூக்கிப்போடுகிறது.

விழுப்புரம் மாவட்டம் காங்கிய னூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முயன்றபோது போலீசாரின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி, சிறைக்கொட்டடியில் மார்க்சிஸ்ட் டுகள் அடைக்கப்பட்டபோது, விடு தலை பாறாங்கல்லைப் போல பாரா முகமாய் இருந்ததைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

முரசொலி ஏடு 8.10.2009 அன்று ‘தீண்டாமைக்கு எதிராகப் போராடினால் சிறையா?’ என்ற தீக் கதிர் தலைப்பை அப்படியே தலைப் பாக்கி பெட்டிச் செய்தியொன்றை எழுதியுள்ளது.

காங்கியனூரில் ஆலய நுழை வுப் போராட்டம் நடத்த முயன்று தடியடி பட்டு ரத்தம் சிந்தி சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டி ருந்த கே.பாலகிருஷ்ணன் உள் ளிட்ட தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநிலச்செயலாளர் என். வரதராஜன், தமிழக அரசை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியிருந் தார்.

இதற்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு தினத்தந்தி மற்றும் தினமணியில் வெளியான செய்திகளை முரசொலி மேற்கோள் காட்டியிருந்தது. போராட்டக்குழு வினர், போலீசார் மீது செருப்பு மற் றும் கல்வீசியதாகவும், கேலி பேசி யதாகவும், இதனால்தான் தடியடி தாண்டவம் நடத்தப்பட்டது என்று அந்தச் செய்திகளை மேற்கோள் காட்டி முரசொலி போலீசாரின் அட் டூழியத்தை நியாயப்படுத்தியுள்ளது.

பொதுவாக போலீசார் தரும் புனைகதைகளே இத்தகைய செய் திகளாக மாறும் என்பதை பத்திரி கையாளர்கள் நன்கு உணர்வார்கள்.

அந்தப் போராட்டத்தில் பங் கேற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதாவை கீழே தள்ளி, ஒரு போலீஸ்காரர், அவர் வயிற்றில் பூட்ஸ் காலால் மூன்று முறை உதைத்ததில் அவருக்கு கடுமை யான ரத்தக் கசிவு ஏற்பட்டு, மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் என்.வரதராஜன் செய் தியாளர்களிடம் எடுத்துக்கூறினார்.

திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்களை நுழையவிடாமல் சாதி ஆதிக்க வெறியர்கள் காலங் காலமாக தடுத்துவந்ததை பின்னுக் குத்தள்ளி, போலீசாரின் தடியடி யை முரசொலி நியாயப்படுத்துகிறது என்றால், சமூக நீதிக்கான போராட் டத்தில் யார் யார் எந்தப்பக்கம் நிற்கி றார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்த சம்பவத்தை இன்னொரு கோணத்தில் பார்த்தால், தீண்டா மை ஒழிப்புப் போராட்டம் என்ற பெயரில் சட்டம்-ஒழுங்கு சீர்குலை வுக்கு திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே எழும் என்று முர சொலி கூறியுள்ளது. ஒரு கோவி லுக்குள் தலித்துகள் நுழைய முடிய வில்லை என்ற நிலை இருந்தாலே சட்டம் நிலைநிறுத்தப்படவில்லை என்றுதானே பொருள்?.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்ன பாடுபடுகிறது என்பதற்கு அன்றாடம் வெளியாகும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் செய்திகளே சாட்சி கூறும். அதிலும் ஆட்களை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டுவது, கொலை செய் வது என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துவ தில் உரிய கவனம் செலுத்தாத போலீசார், அநீதியை எதிர்த்து களத் திற்கு வரும் சமூக நீதிப் போராளி களை அடித்து நொறுக்குவதில் அதீத கவனம் செலுத்துகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயலவில் லை. மாறாக, அரசியல் சாசனத்தின் படி தீண்டாமையை கடைப்பிடிப் பது சட்டப்படி குற்றம் என்று கூறப் பட்டிருப்பதை செயல்படுத்த அரசு மறுக்கும்போது, சமூக நீதியை நிலைநாட்டவே களம் காண்கிறது.

காங்கியனூரில் மகத்தான போராட்டத்திற்குப் பிறகுதான் அரசு அதிகாரிகளே முயற்சி எடுத்து கோவிலின் கதவு தலித் மக்களுக் காக திறக்கப்பட்டிருக்கிறது. இதை அரசு ஏற்கனவே செய்திருந்தால் போராட்டத்திற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது.

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் சிவன் கோவிலிலும் ஆலய நுழைவு போராட்டம் அறி வித்து, மார்க்சிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்ட பிறகே தலித்துக ளுக்கு வழிபடும் உரிமை வழங்கு வதற்கான உடன்பாடு ஏற்பட்டிருக் கிறது. பொதுவான இடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தக்கூட போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது என்பது சமூக நீதி பேசுபவர் களின் ஆட்சிக்கு அழகு சேர்ப்ப தல்ல.

முரசொலியின் பெட்டிச் செய்தி வெளியாகியுள்ள அதே பக்கத்தில் ‘திமுக-சமூக நீதி’ என்ற நூலுக் கான விளம்பரம் வெளியிடப்பட்டுள் ளது. சமூக நீதி வெறும் விளம்பரத் திற்கு மட்டும்தானா என்ற கேள் வியை இது எழுப்புகிறது.

-மதுரை சொக்கன்

-நன்றி:தீக்கதிர்